சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற சென்னையில் இதுவரை 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 3 கட்டங்களாக நடைபெற தொடங்கியிருக்கிறது. இதற்காக முன்னரே விண்ணப்ப படிவங்கள் பொது மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 24.07.2023 முதல் 04.08.2023 வரை முகாம்கள் மூலம் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநரில் 1428 நியாய விலைக் கடைகள் உள்ளது. அதில் முதற்கட்டமாக 704 நியாய விலைக் கடைகளில் இந்த பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 1730 விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் சென்னை மாநகரில் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முகாம்களிலும் 2266 பயோமெட்ரிக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 704 சிறப்பு முகாம் பொறுப்பு அலுவலர்கள், 1730 தன்னார்வலர்கள், 704 உதவி தன்னார்வலர்கள், 1515 காவலர்கள், 154 நகரும் குழுக்கள் இந்த சிறப்பு முகாம்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்கின்ற வகையில் மொத்தம் 1730 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

2வது கட்டமாக முகாம்கள் 05.08.2023 முதல் 16.08.2023 வரை 724 நியாயவிலைக் கடைகளில் நடைபெறவுள்ளது. இரண்டு முகாம்களில் விடுபட்டவர்களுக்காக 17.08.2023 முதல் 28.08.2023 வரை மூன்றாம் கட்டமாக சிறப்பு முகாம்கள் நடைபெறும். சென்னை மாநகரில் மட்டும் 5,30,572 பேருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பூர்த்தி செய்யப்பட்ட 2,01,050 படிவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.