பட்ஜெட் கூட்டத் தொடருக்காகப் புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 26-ல் கூடுகிறது. அன்றைய தினம் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையாற்றுகிறார். இந்நிலையில் வரும் 23-ல் முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரைச் சந்திக்கிறார்.

புதுவை சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்ததால் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அப்போதைய காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததால் மத்திய அரசே நேரடியாக புதுவைக்குரிய 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

நடப்பாண்டுக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு அனுமதி கோரி கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை. ஓரிரு நாளில் அனுமதி கிடைத்துவிடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவியேற்ற பின்னர் இதுவரை முதல்வர் ரங்கசாமி டெல்லிக்குச் செல்லவில்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லை. 20-ம் தேதி (நாளை) ரங்கசாமி முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார். வரும் 23-ம் தேதி ரங்கசாமி டெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். அப்போது பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரைச் சந்திக்கிறார்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 26-ல் கூடுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி வெளியிட்ட தகவலில், “வரும் 26-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை உரை நிகழ்த்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.