தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (ஜூலை 20) வெளியிட்ட அறிக்கை:
“கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கருணாநிதி. செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம்.
செம்மொழி அறிவிப்பு வந்து 17 ஆண்டுகளாகிவிட்டன. மொழி வளர்ச்சிக்கென நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என, கறாராகத் தொகுத்துப் பார்த்தால், பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு வழக்கில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என, உயர் நீதிமன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம்.
இளமையில் திராவிடத் தலைவர்களால் ஈர்க்கப்பட்டு, இந்தி எதிர்ப்பாளன் ஆனேன். பிற்பாடு இந்திப் படங்களில் நடித்தேன். அது தொழிலுக்காக. பல மொழிகளில் நடித்த பிறகுதான் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்பதை முழுதாக உணர்ந்தேன். ‘இந்தி ஒழிக’ என முழக்கமிடுவதோடு, நம் கடமை முடிந்துவிடவில்லை. ‘தமிழ் வாழ்க’ என உரக்கச் சொல்ல வேண்டும். சொல்வதோடு நிறுத்திவிடக் கூடாது, செயலிலும் காட்ட வேண்டும். இல்லையெனில், பழம்பெருமை மட்டும் பேசும் வாய்ச்சொல் வீரர்கள் என வரலாறு நம்மைப் பழித்துவிடும்.
ஆங்கிலத்தைத் தவிர பிறமொழிகள் ஆபத்தில் உள்ளன. தினம்தோறும் மொழிகள் செத்துக்கொண்டிருக்கின்றன. சாகாவரம் பெற்ற தமிழே தடுமாறிக்கொண்டிருக்கிறது.
சீன மொழியைக் கற்றுக்கொள்ள உலகமெங்கும் 500-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆங்கிலத்தைப் பரப்ப பிரிட்டிஷ் கவுன்சில், ஜெர்மன் மொழியைப் பயிற்றுவிக்க கோத்தே சென்ரம், பிரெஞ்சு மொழி கற்க அலையன்ஸ் ப்ராஞ்சசே என, அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கும் பல அமைப்புகள் உள்ளன.
உலக மொழிகளைப் பார்ப்பானேன், இந்தியைப் பரப்பவும் கற்றுக்கொடுக்கவும் இந்தி பிரச்சார சபா மிகத் தீவிரமாக இயங்கிவருகிறது. ஆனால், தமிழை முறையாகக் கற்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற இன்னமும் ஓர் அமைப்பு இங்கே ஏற்படுத்தப்படவில்லை. உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் தமிழைக் கற்றுக்கொள்ள நெறிப்படுத்தப்பட்ட பாடத் திட்டமோ, தேர்வு முறையோ, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழோ கொண்ட ஒரு படிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
பிற அறிவுத்துறைகளுடன் ஒத்திசைந்து நிகழவேண்டிய தமிழ் ஆய்வுகளை முடுக்கிவிடுவது, அறிஞர்களையும், பண்பாட்டு ஆளுமைகளையும் அங்கீகரிப்பது, அச்சில் இல்லாத நூல்களை, அகராதிகளை மறுபதிப்பு செய்வது, தமிழின் மகத்தான படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சேர்ப்பது, தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவது, 1956-ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி தமிழை முழுமையான ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்துவது, தமிழ் கற்றவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்கி ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்வது, தமிழகத்தில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமாகப் பயிற்றுவிப்பது, தமிழகத்தின் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளிலும் தமிழும் இடம்பெறுவது, உலகத்தரத்திலான நூலகங்கள் ஒவ்வொரு நகரிலும் அமைப்பது என, பற்பல பணிகள் இன்னமும் முடுக்கி விடப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன.
இங்கு நான் சுட்டியிருப்பவை செய்து முடித்தாக வேண்டிய இமாலயப் பணிகளின் சிறு முனைகள்தான். இவை போன்ற பெரும் முயற்சிகளை தனிக்கவனம் செலுத்தி, மேற்கொள்ள தமிழ் மொழி வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டியது அவசியம். தவிர, நம் மொழியின் மீதும் பண்பாட்டின் மீதும் தாக்குதல்களும், திணிப்புகளும் நிகழ்கிற காலகட்டத்தில் தனி அமைச்சகம் என்பது இன்னமும் பொருத்தப்பாடு மிக்கதாகிறது. மொழி அரசியலை முன்வைத்து ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றியவர்களுக்கு தமிழ் மொழியை அரியணை ஏற்றும் கடமையும் பொறுப்பும் உண்டு.
தற்போது தொழில்துறை அமைச்சரிடம், ‘தமிழ் – ஆட்சிமொழி’ கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சரின் முதன்மையான அக்கறையும் உழைப்பும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியாகத்தான் இருக்க முடியும். அத்துறை பணிச்சுமை மிக்க ஒன்று. அதனுடன் தமிழ் – ஆட்சி மொழி, தமிழ்க் கலாச்சாரம், தொல்லியல் துறை போன்ற தமிழர் வரலாற்றைக் காக்க வேண்டிய மூன்று முக்கியப் பொறுப்புகளையும் சேர்ப்பது நிச்சயம் கூடுதல் சுமைதான். தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சராகத்தான் அனைவராலும் கருதப்படுகிறாரே அன்றி தமிழ் ஆட்சி மொழி அமைச்சராக அல்ல.
தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும் தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை. நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழக முதல்வர் இதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டுமென உலகத் தாய்மொழி தினத்தில் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.