15-வது ஐபிஎல் சீசனில் வெற்றி கணக்கை ஏனோ இன்னும் தொடங்காமல் உள்ளது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது சென்னை.

கொல்கத்தா மற்றும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவதாக பந்து வீசிய காரணத்தால் மைதானத்தில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததாகவும். அதன் காரணமாக பந்தை இறுக்கமாக பற்றி பந்து வீசுவதிலும், ஃபீல்ட் செய்வதிலும் சிக்கல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் சென்னை டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. இருந்தும் ஆட்டத்தை இழந்துள்ளது. தோல்விக்கு பிறகு கேப்டன் ஜடேஜா சொன்னது இதுதான்.

“பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை நாங்கள் இழந்து விட்டோம். முதல் பந்து முதலே நாங்கள் எதிர்பார்த்தது எங்களுக்கு நடக்கவில்லை. நாங்கள் வலுவான அணியாக மீண்டு வந்து கம் பேக் கொடுப்போம். அதற்கான வழியை நிச்சயம் சிறப்பானதாக அமைப்போம். கெய்க்வாட் ஒரு சிறந்த வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவருக்கு நாம் நம்பிக்கை கொடுக்க வேண்டி உள்ளது. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தூபேவின் பேட்டிங் அமர்க்களமாக உள்ளது.

நிச்சயம் நாங்கள் கடின உழைப்பை செலுத்தி வலுவான அணியாக கம் பேக் கொடுப்போம் என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்” என சொல்லியிருந்தார் ஜடேஜா. மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக சென்னை அணி வரும் 9-ஆம் தேதியன்று ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.