தெருக்களில் வசிப்பவர்கள் உள்ளிட்ட ஏழை – எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குடும்ப அட்டை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனடையும் மக்களில், அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினரும், தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று சூழலில் இந்தச் சட்டத்தால் பயனடைவதை உறுதி செய்வது அவசியமாகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் வாழும் இத்தகையப் பிரிவினரைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான சிறப்புத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை, ஜுன் 2-ஆம் தேதி அறிவுறுத்தியுள்ளது.
தெருக்களில் வசிப்பவர்கள், குப்பைகளை சேகரிப்பவர்கள், தெருத்தெருவாகச் சென்று பொருட்களை விற்பவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள் போன்றவர்களைக் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனடையும் தனிநபர்களையும், குடும்பங்களையும் கண்டறிவது, குடும்ப அட்டைகளை விநியோகம் செய்வது ஆகிய பொறுப்புகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் விடப்பட்டுள்ளன.