காத்மாண்டு: நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 77 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் மாயமாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. நேபாளத்தில் ஆண்டு தோறும் ஜூன் மத்தியில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை பருவமழை காலமாகும். அங்கு பெரும்பாலான பகுதிகள் மலைப்பாங்கானது. அதனால் பருவமழை காலங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதும், அதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளது. தற்போது, பருவ மழை காலம் முடிந்த பின்னரும் மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நேபாளத்தின் கிழக்கு மலை பிரதேசங்களில் கனமழை வெளுத்து வாங்குவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களில் வெள்ளம் புகுந்து ஆறாக ஓடுகிறது.

இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மேலும், கரை புரண்டோடும் வெள்ளத்தில் பாலங்களும், சாலைகளும் அடித்து செல்லப்பட்டன. பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவாசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமானது.  சேட்டி என்ற கிராமத்தில் 60 பேர் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தவித்து வருகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 350 கி.மீ தூரத்தில் உள்ள இக்கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகள் சுணங்கியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கிழக்கு பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் காத்மாண்டு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே கிழக்கு மலை பிரதேசங்களில் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனால் கிராமங்களுக்கு இடையிலான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படுகாயமடைந்த 22க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 30க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியாததால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் மீட்வு பணிகளில்  முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here