பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.

24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்களில் சலுகை உள்ளிட்ட சலுகைகளை அறிவித்திருக்கிறார்.

டெல்லியைத் தொடர்ந்து அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. அங்கு தற்போது, காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வராக இருக்கிறார். விரைவில் அம்மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது.

இந்நிலையில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேஜ்ரிவால், “பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இதனால், பஞ்சாபில் 77% முதல் 80% வரையிலான மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லாதநிலை ஏற்படும்.

மேலும், முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும். இது கேஜ்ரிவாலின் வாக்குறுதி, கேப்டனின் வாக்குறுதி இல்லை. நாங்கள் எங்களின் வாக்கைக் காப்பாற்றுவோம். கேப்டன் கொடுத்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் மின் உற்பத்தியில் எந்தக் குறைபாடும் இல்லை. இருந்தாலும் மாநிலத்தில் மணிக்கணக்கில் மின்வெட்டு நிகழ்கிறது. வீட்டில் ஒரு மின்விசிறி, ஒரு லைட் மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 மின் கட்டணம் வருகிறது.

இந்த தவற்றுக்கு ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தவுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதுமட்டுமல்ல பழைய மின் கட்டண அரியர்ஸை யாருமே கட்டத் தேவையிருக்காது ” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “டெல்லியில், மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறும் மின்சாரத்தையே நாங்கள் மக்களுக்குக் கொடுக்கிறோம். இருந்தாலும் கூட அங்கு மின் தடையில்லை. மின் கட்டணமும் நாட்டிலேயே குறைந்த அளவில் இருக்கிறது. அதை சாத்தியமாக்கியது ஆம் ஆத்மி கட்சிதான். அதையே நாங்கள் பஞ்சாபிலும் செய்வோம்” என்றார்.