பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத 33,557 மாணவர்களும், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து, 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது.
இன்று காலை (ஜூலை 19) 11 மணி அளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிளஸ் 2 மதிப்பெண்களை வெளியிட்டார்.
அப்போது, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
“10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் ஏற்கெனவே இணையதளத்தில் உள்ளன. அதனால் மதிப்பெண்களைக் கணக்கிடுவது சிரமமான வேலை அல்ல. வரும் 22-ம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். மாணவர்கள் அதனை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
கரோனா காலமாக இருந்தாலும், கல்வியைப் பொறுத்தவரையில் சரியான முடிவைச் சரியான நேரத்தில் முதல்வர் எடுத்துள்ளார்.
இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி வந்திருக்கிறது. மொத்தமாக, 8,18,129 மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன. 11-ம் வகுப்பில் எந்த தேர்வுக்கும் வராத 1,656 மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கிறார்கள். தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8,16,473. தேர்ச்சி சதவீதம் 100 சதவீதம்.
பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத 33,557 மாணவர்களையும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்துள்ளோம்”.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.