திருவாரூரில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொது விநியோகத் திட்டத்திற்கு அனுப்பப்படும் அரிசி பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை தரமான முறையில் அனுப்பப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கிடங்கில் இருந்த அரிசி துவரம் பருப்பு ஆகியவற்றை பரிசோதித்து தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்கிறதா என்றும், விதைநெல் உரம் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, வேளாண் துறை கூட்டுறவுத்துறை உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நேற்று வரை தமிழகத்தில் 5 லட்சத்து 61 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 40 லட்சத்து 5 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 15 தினங்களுக்குள் குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை ஒட்டி கடந்த 14 மாதங்களில் தமிழக முழுவதும் இதுவரை 12 லட்சத்து 54 ஆயிரத்து 270 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக முழுவதும் 10 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலை கடைகளும் 7 லட்சம் மதிப்பெட்டியில் பகுதி நேர நியாய விலை கடைகளும் கழிவறை வசதியுடன் கட்டுவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளார் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். மேலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழலை தடுக்க புகார்பெட்டி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாரிமுத்து உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here