தரமற்ற உணவு வழங்கப்படுவது, வழங்கப்பட்டு வந்த அசைவ உணவு நிறுத்தப்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளைக் கூறிய கல்லூரி விடுதி மாணவர்களிடம், குறைகள் அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா உறுதி அளித்துள்ளார்.

ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்காக புதுச்சேரியில் 16 விடுதிகளும், காரைக்காலில் 10 ம், ஏனாமில் 2ம் என மொத்தம் 28 விடுதிகள் உள்ளன. இங்கு ஏழ்மை நிலையிலுள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயில்கின்றனர். ஆனால், அவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செயல்படாத சூழலில் அவர்கள் விடுதிகள் மோசமான நிலையிலுள்ளன. அத்துடன் விடுதியிலுள்ள மாணவர்களுக்கு அசைவ உணவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. முட்டைகூட தராத சூழலே உள்ளது. இதுதொடர்பாக போராட்டங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் காலாப்பட்டில் தனியார் கட்டிடத்தில் இயங்கும் கல்லூரி மாணவர்களுக்கான ஆதிதிராவிட விடுதி மாணவர்கள், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான சந்திர பிரியங்காவிற்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். மாணவர் விடுதி சுத்தமின்றி, முறையான பராமரிப்பு இன்றி காணப்பட்டது.

அங்கு 3 துப்புரவாளர்கள் இருந்தும் தினமும் சுத்தம் செய்வதில்லை. அறைகளில் சுவிட்சைத் தொட்டாலும் ஷாக் அடிப்பதை அமைச்சர் நேரில் பார்த்தார். கரோனா தொற்று காரணமாக விடுதிகள் மூடப்பட்டத்திலிருந்து மீன், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை; மூன்று ஆண்டுகளாக அசைவம் தரப்படுவதில்லை என அமைச்சரிடம் மாணவர்கள் முறையிட்டனர். மேலும், விடுதி தனியார் கட்டிடத்தில் இயங்குவது குறித்தும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் சந்திர பிரியங்கா, “மத்திய அரசு நமக்கு நிறைய நிதி தருகிறது. எனவே, அதன் மூலம் விடுதி கட்டப்படும். அதுவரை வாடகை கட்டிடம் முறையாக பராமரிக்கப்படும். தினமும் அறைகள் சுத்தம் செய்யப்படும். அசைவ உணவுக்கு தேவையான பொருட்களை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. எனவே, விரைவில் அசைவ உணவு அளிக்கப்படும்” என உறுதியளித்தார்.