தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா? ரத்து செய்வதா? என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. முதல்வருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
கரோனா முதல் அலை பரவிய நேரத்தில் பிளஸ் 2 தேர்வு பெரும்பாலும் முடிந்து ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடந்த நிலையில் பின்னர் நடத்தப்பட்டது. ஆனால், இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வேகமாகப் பரவி வருகிறது. இடையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதில் தஞ்சை உள்ளிட்ட பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்குத் தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டன, தமிழகத்தில் கரோனா தொற்று 36,000 வரை அதிகரித்தது. தற்போது குறைந்து வந்தாலும் மாவட்டங்களில் பரவல் குறையவில்லை. இந்திய அளவிலும் தொற்று அதிகமாக உள்ள நிலையில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவியதையடுத்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்திவைத்தது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மத்தியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து சமீபத்தில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மாநில அரசுகள் தங்கள் விரிவான கருத்துகளையும், ஆலோசனைகளையும் அனுப்பிவைக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டது. பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் அனுப்பின.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு தொடர்பாக இறுதி முடிவை எட்ட, இன்று பிரதமர் மோடி கல்வித்துறை உயரதிகாரிகளுடன் காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், மாணவர்களின் உடல்நலன் கருதி நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா என்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தியபின் அறிவிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்கெனவே, மாநிலத்தில் பிளஸ் 2 நடத்துவதை மத்திய அரசு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக எடுக்கும் முடிவை ஒட்டி அறிவிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு ஒத்தி வைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்பது ஆலோசனைக்குப் பின் தெரியவரும்.