5-ஜி தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பாக சென்னை ஐஐடி-ல் ஆராய்ச்சி நடைபெற உள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் 5-ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை ஐஐடி-யுடன் இணைந்து செயல்பட எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் இரு நிறுவனங்களும் 5-ஜி தொழில்நுட்பத்தில் புதுமைகளையும், கிராமப்புறங்களில் குறைந்த செலவில், குறைந்த அலைவரிசையில் மேம்படுத்தப்பட்ட 5-ஜி நெட்வொர்க் வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை ஐஐடி டீன் மகேஷ் பஞ்சாக்னுல்லா கூறும்போது, “சென்னை ஐஐடி-ன் 5-ஜி ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டம், இந்தியாவில் 5-ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் திகழும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகும். செயல்முறை 5-ஜி தொழில்நுட்பத்துக்கு இணையான ஆராய்ச்சியை மேற்கொள்வதே இந்த கூட்டுமுயற்சியின் நோக்கம்” என்றார்.
சென்னை ஐஐடி எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் துறை உதவிப் பேராசிரியரும், சிஎஸ்ஆர் திட்ட முதன்மை ஆய்வாளருமான ராதாகிருஷ்ண காந்தி கூறும்போது, “இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்கும் பாலமாக 5-ஜி தொழில்நுட்பம் திகழும். இந்த துறையில் மாணவ, மாணவிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன” என்றார்.