தமிழக – கேரள எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டு நவம்பரில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் கேரள போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது காட்டுக்குள் முகாம் அமைத்து தங்கியிருந்த மாவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த சம்பவத்தில்மேலும் ஒரு மாவோயிஸ்ட்டுக்குபலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி வனப்பகுதிக்குள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் ரகசியகூட்டம் நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தபல மாவோயிஸ்ட்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கேரள மாநில போலீஸார் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் கேரள வனப்பகுதிகளில் தீவிர சோதனை நடத் தினர்.

மாவோயிஸ்ட்களுக்கும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும்,வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்றும் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.அதைத் தொடர்ந்து தமிழக – கேரளஎல்லையில் உள்ள வனப்பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி, கம்பம் மலைப்பாதைகளில் தடுப்பு அமைத்து, பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை,தேனி, கம்பம், கோவை மாவட்டங்களில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் கூடுதல் போலீஸார் போடப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. அங்கும் என்ஐஏ அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளா எல்லையோர சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.