ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் பிரிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 6-வது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் விஸ்வநாதன் ஆனந்த் விளையாடிய இந்த ஆட்டம் 35-வது நகர்த்திலின் போது டிராவில் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட ‘சடன் டெத்’ ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. சடன் டெத் விதிமுறைகளின் படி ஆட்டம் டிராவில் முடிவடைந்தாலும் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய வீரரே வெற்றி பெற்றதாக கருதப்படுவார். இதனால் ஆனந்துக்கு இந்த சுற்றின் வாயிலாக 1.5 புள்ளிகள் கிடைத்தது.

மற்றொரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அஜர்பைஜானின் ஷக்ரியார் மமேதியரோவை வீழ்த்தினார். இதன் மூலம் மேக்னஸ் கார்ல்சன் 12.5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். அதேவேளையில் விஸ்வநாதன் ஆனந்த் 11.5 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.