வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என உள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யகோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, உள்இடஒதுக்கீடு சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, செல்லாது என கூறி சட்டத்தை ரத்துசெய்து நவ.1-ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் வழக்கறிஞர் டி.குமணன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீ்ட்டு மனுவில் கூறியிருப்பதாவது: 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு எள்ளளவும் மீறப்படவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில் உள்இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வன்னியர் சமூகத்தின் 7 உட்பிரிவுகளுக்கும் சேர்த்துதான் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதேபோல பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கும், அருந்ததியினருக்கும் தனி உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சட்டம் இயற்ற அரசியலமைப்பு சட்டப்படி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் கடந்த 1983-ல் நடத்திய கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள்தொகை அடிப்படையிலேயே இந்த உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்து எதிர் மனுதாரர்களின் கருத்துகளை கோராமல், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதேபோல், உள்இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.