“குவைத்தில் இந்திய பொறியாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அதனால், குவைத் அரசுடன் பேசி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்ற பொறியாளர்கள் அனைவருக்கும் வேலையும், விசாவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: “குவைத் அரசு பிறப்பித்திருக்கும் பொருத்தமற்ற நிபந்தனை காரணமாக, அங்கு பணியாற்றி வரும் 5,000-க்கும் மேற்பட்ட தமிழக பொறியாளர்கள் உள்ளிட்ட 12,000 இந்திய பொறியாளர்கள் பணியிழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்திய கல்வி நிறுவனங்களின் அங்கீகார முறை குறித்து அறியாததால் குவைத் அரசு விதித்திருக்கும் புதிய நிபந்தனையிலிருந்து இந்திய பொறியாளர்களை விடுவிக்க குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
குவைத்தில் பணியாற்றும் இந்திய பொறியாளர்கள் விசா நீட்டிப்பு பெற வேண்டும் என்றால், அதற்கு குவைத் பொறியாளர்கள் சங்கத்திடமிருந்து தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்று குவைத் அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், இந்திய தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற இந்திய பொறியாளர்களுக்கு மட்டும் தான் தடையின்மை சான்று வழங்க முடியும் என குவைத் பொறியாளர்கள் சங்கம் கூறுகிறது. இதனால் இந்தியாவில் ஐஐடி, என்ஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் படித்தவர்களால் கூட குவைத் பொறியாளர் சங்கத்தின் தடையின்மை சான்றிதழை பெற முடியவில்லை.
இந்த சிக்கலுக்கான தீர்வு மிகவும் எளிமையானது. ஆனால், குவைத் அரசின் புரிதலின்மை காரணமாகவே பல ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்படும் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய அங்கீகார வாரியத்தின் (National Board of Accreditation -NBA) அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டும் தான் உண்மையான பொறியாளர்கள் என்றும், மற்றவர்கள் போலி பட்டம் பெற்றவர்கள் என்றும் குவைத் கருதுகிறது. ஆனால், இது உண்மையல்ல.
இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய அங்கீகார வாரியம் என்பது ஒப்பீட்டளவில் மிகவும் இளைய நிறுவனம் ஆகும். பொறியியல், மருந்தியல், மேலாண்மை உள்ளிட்ட கல்விகளின் தரத்தை அளவிட அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் (ஏஐசிடிஇ) 1994-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் தேசிய அங்கீகார வாரியம். தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கமாக செயல்பட்டு வந்த இந்த அமைப்பு 2010-ம் ஆண்டில் தான் தனியாக செயல்படத் தொடங்கியது. இந்தியாவை பொறுத்த வரை பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கீகாரம் மட்டுமே கட்டாயம் ஆகும்; தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் இன்று வரை கட்டாயமாக்கப்படவில்லை.
2022-ஆம் ஆண்டு முதல் தான் தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுவும் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இத்தகைய சூழ்நிலையில், குவைத்தில் 20, 30 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்களிடம் தேசிய அங்கீகாரச் சான்று கேட்டால் அவர்களால் தாக்கல் செய்ய முடியாது. எனவே, அவர்களுக்கு தடையின்மை சான்று கிடைக்காது. அதனால், அவர்கள் வேலையிழப்பது மட்டுமின்றி, கைது செய்யப்பட்டு குடும்பத்துடன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் ஆபத்து உள்ளது. இது பொறியாளர்களின் வாழ்வில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்ற பொறியாளர்களுக்கு மட்டும் தான் விசா நீட்டிப்பு வழங்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2018, 2019-ஆம் ஆண்டுகளிலும் இதே நிபந்தனை விதிக்கப்பட்டது. அப்போது குவைத்தில் பணியாற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய பொறியாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். கடந்த 2019-ம் ஆண்டில் இதே சர்ச்சை எழுந்த போது இந்தியாவிலிருந்து உயர்நிலைக்குழு குவைத்துக்கு சென்று இந்த சிக்கல் குறித்து ஆராய்ந்தது. பின்னர் இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலை அனுப்பிய மத்திய அரசு, அத்தகைய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படித்தவர்களிடம் தேசிய அங்கீகாரச் சான்று கோரத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியது. அதனால், அப்போது சற்று ஓய்ந்திருந்த இந்த சர்ச்சை, இப்போது மீண்டும் தலைதூக்கி பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
கல்வித்தகுதியும், அனுபவமும் பெற்ற இந்திய பொறியாளர்கள், குவைத் அரசின் தவறான புரிதல் காரணமாக வேலையிழப்பதை அனுமதிக்க முடியாது. குவைத்தில் இந்திய பொறியாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அதனால், குவைத் அரசுடன் பேசி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்ற பொறியாளர்கள் அனைவருக்கும் வேலையும், விசாவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழக பொறியாளர்களும் இதில் பாதிக்கப்படுவர் என்பதால் இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.