கமல்ஹாசன் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறாரா என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் பதில் அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் அதிமுக, திமுக இல்லாமல் மூன்றாவது அணியாகத் தேர்தலில் நிற்கிறது. மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயகக் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில், இன்று இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாகிறது. சென்னை தியாகராய நகரில் நட்சத்திர ஓட்டலில் மநீம 2-வது வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிதாக இணைந்துள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதற்கட்டமாக 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சி.கே.குமரவேல் இதுகுறித்த தகவலைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறும்போது, ”ஐஜேகே மற்றும் சமக போட்டியிடும் தொகுதிகளில் முதற்கட்டமாக 20 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகுதிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று எங்களுக்கும் தெரியவில்லை. அதற்கான விடை இன்று கிடைக்கும். ஆனால் அவர் 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை. ஒரு தொகுதியில் மட்டுமே களம் காண்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி, அப்துல் கலாம் விஷன் 2020, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் ஆகிய கட்சிகள் தற்போதைக்கு உள்ளன. மேலும் ஒரு கட்சி இணைவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது” என்று சி.கே.குமரவேல் தெரிவித்தார்.

இதுவரை கமல்ஹாசன் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தல் அவருக்கு முதல் நேரடி சவால் என்பதால் தொகுதி தேர்வு பலகட்ட ஆய்வுக்குப் பின்னர் முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பெரும்பாலும், சென்னையில் உள்ள தொகுதியிலேயே கமல் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.