பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பிறழ்சாட்சியாக மாறி பொய் சொனனாலும் மருத்துவ ஆவணங்கள் பொய் சொல்லாது; அதன் அடிப்படையில் வழங்கிய தண்டனை செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சகோதரர்கள் இளவரசன், கார்த்திக். கடந்த 2018-ல் பள்ளி மாணவி ஒருவர் டியூஷன் சென்று விட்டு தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இளவரசன், கார்த்திக் மற்றும் அவர்களின் 4 நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் ஆண் நண்பரை மிரட்டி அங்கிருந்து அனுப்பிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் நீதிமன்றம் இளவரசன், கார்த்திக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், நண்பர்கள் 4 பேரையும் விடுதலை செய்தும் 2019-ல் உத்தரவிட்டது. ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி சகோதரர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

இதனை விசாரித்து நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியும், அவரது ஆண் நண்பரும் பிறழ்சாட்சியாக மாறியுள்ளனர். இருப்பினும் மரபணு பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வு அறிக்கை அடிப்படையில் மனுதாரர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது. விசாரணையின்போது மாணவி அளித்த வாக்குமூலம் மற்றும் மருத்துவ பரிசோதனையில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி பொய் கூறலாம். ஆனால், மருத்துவ அறிக்கைகள் பொய்யாக இருக்காது. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட மாணவிகள், சாட்சிகள் குற்றவாளிகளுக்கும், சமுதாயத்துக்கு பயந்தும் சாட்சி சொல்வதற்கு முன்வருவதில்லை என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

எனவே, இந்த வழக்கில் தஞ்சாவூர் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.