லண்டன்: உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின் விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்; பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று, ஆகியவற்றால் முன் நாட்களில் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக கூறினார்.

இதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய போரால் நிலைமை மோசமடைந்துள்ளதாக குட்டரெஸ் கூறினார். இன்னும் ஓரிரு நாட்களில் உணவு பச்சாக்குறையால் பல்வேறு நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளார். ஓரிரு ஆண்டுகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியுள்ள குட்டரெஸ், ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் வேளாண் பணிகளுக்கு தேவையான உரம், எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருவதாக கூறியுள்ளார்.

2023ம் ஆண்டில் உணவு பஞ்சம் தீவிரமடையும் என்றும் உணவு பொருட்களுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உணவு பொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க ஐநா. அமைப்பின் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குட்டரெஸ் தெரிவித்துள்ளார். வேளாண் பணிகள் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக விவசாயிகளின் நிதி ஆதாரத்தை பெருக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்ட வேண்டும் என்றும், உணவு சந்தையை பலப்படுத்த தனியார் துறையினரும் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.