தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (65), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கீழமுந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (28) மற்றும் சிலர் சேர்ந்து தூத்துக்குடி ராஜீவ்நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (34) மற்றும் அவரது சகோதரருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் கடந்த 01.02.2022 முதல் 31.12.2022 வரை பல தவணைகளில் ஆன்லைன் மூலமாகவும், ரொக்கமாகவும் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரரை மேற்குவங்க மாநிலம் ஹவுராவுக்கு அழைத்துச்சென்று, மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறி போலியாக சான்றிதழ் வாங்கி கொடுத்துள்ளனர். மேலும், ரயில்வே பணிக்கான பயிற்சி எனக்கூறி இருவரையும் கொல்கத்தா, டெல்லி என அலைக்கழித்துள்ளனர். ஆனால், வேலை எதுவும் கிடைக்கவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துகிருஷ்ணன் பணத்தை திருப்பி தருமாறு அவர்களிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இந்த மோசடி குறித்து முத்துகிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயராம் மேற்பார்வையில் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதன் அடிப்படையில் மாரியப்பன் மற்றும் ராஜேஸ்வரன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதேபோன்று ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ.1.26 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது