தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 4, 5-ம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 6, 7-ம் தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
3-ம் தேதி காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 10 செமீ, பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
4-ம் தேதி குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.