தமிழ் வாத்தியாரான எம்.எஸ்.பாஸ்கரின் மகன் சபாபதி (சந்தானம்). இயல்பிலேயே திக்குவாயான அவர் சிறு வயது முதலே பல அவமானங்களையும் கிண்டல்களை சந்தித்து வளர்கிறார். அவருக்கு இருக்குற ஒரே சந்தோஷம் எதிர்வீட்டில் குடியிருக்கும் சாவித்ரி (ப்ரீத்தி வர்மா). திக்குவாய் பிரச்சினையால் அவருக்கு தொடர்ந்து இண்டர்வியூக்களில் வேலைகள் மறுக்கப்படுகின்றன. இதனால் சபாபதி குடித்துவிட்டு மனமுடைந்த நிலையில் இருக்கும் ஒரு சூழலில் அவருக்கு தேர்தல் நேரத்தில் மக்களுக்கு விநியோகப்பட இருந்த கோடிக்கணக்கான பணம் கொண்ட பெட்டி ஒன்று கிடைக்கிறது. அந்த பெட்டியைத் தொலைத்த அரசியல்வாதியின் ஆட்கள் அவரை தேடுகிறார்கள். அந்த பணத்தை சபாபதி என்ன செய்தார்? வில்லனின் ஆட்கள் அவரை பிடித்தார்களா? என்பதே ‘சபாபதி’ படத்தின் கதை.
சபாபதியாக சந்தானம். திக்கு வாய் பிரச்சினை கொண்ட அப்பாவிப் பையனாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார். வழக்கமாக சந்தானம் நாயகனாக நடிக்கும் படங்களில் அவரோடு காமெடிக்கு இருக்கும் கூட்டம் இதில் குறைவு. மொத்தப் படத்தையும் தனி ஆளாக சுமக்கிறார். முந்தைய படங்களோடு ஒப்பிடுகையில் எமோஷனல் காட்சிகளில் நடிப்பிலும் முன்னேற்றம் தெரிகிறது. சந்தானத்துக்கு அடுத்தபடியாக படம் முழுக்க ஸ்கோர் செய்பவர் எம்.எஸ்.பாஸ்கர். இடைவேளைக்கு முன்பு சந்தானத்துக்கும், எம்.எஸ்.பாஸ்கருக்கும் இடையே நடக்கும் ஒரு நீண்ட காட்சியில் சிரிப்பொலி அரங்கம் அதிர்கிறது. படத்தில் ஓரிரு காட்சியில் வரும் ‘குக் வித் கோமாளி’ புகழ் செய்யும் காமெடிகள் எடுபடவில்லை. படத்தின் நாயகி ப்ரீத்தி வர்மாவுக்கு பெரிதாக காட்சிகளும் இல்லை, இருக்கும் ஒரு சில காட்சிகளில் நடிப்பும் சுத்தமாக வரவில்லை. இவர்கள் தவிர லொள்ளு சபா சுவாமிநாதன், மாறன், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சரிவர செய்திருக்கிறார்கள்.
எம்.எஸ். பாஸ்கருக்கும் சந்தானத்துக்கும் இடையே நடக்கும் காட்சிகள் தவிர்த்து விட்டு பார்த்தால் படத்தில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை. அனைத்து இயக்கங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பதாக விதி பேசுவதுடன் தொடங்குகிறது படம். ஆனால் படத்தின் கதையே கிட்டத்தட்ட இரண்டாம் பாதியில் தொடங்குகிறது. அதுவரை சந்தானமும் அவரைச் சுற்றி நடப்பவைகளையுமே திரும்பத் திரும்ப காட்டப்படுகின்றனர். திக்குவாய் பிரச்சினையால் சந்தானம் சந்திக்கும் அவமானங்களை மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டேயிருப்பது, அல்லது வசனங்களின் மூலம் சொல்லிக் கொண்டே இருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதிலும் முதல் பாதியில் வரும் அந்த இண்டர்வியூ காட்சி முழுக்க முழுக்க நெஞ்சை நக்கும் முயற்சி.
தனக்கு கிடைத்த பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறார் என்பதுதான் இரண்டாம் பாதி. ஆனால் அதுவும் சுவாரஸ்யமற்ற காட்சிகளால் தொய்வாக நகர்கிறது. க்ளைமாக்ஸுக்கு முன்னால் ரயில்வே ஸ்டேஷனில் பணப் பெட்டியை வைத்து செய்யும் காமெடிகள் எல்லாம் சிறுபிள்ளைத்தனம். பணம் சந்தானம் கையில் கிடைப்பது தொடங்கி, அதை அவர் காப்பாற்ற போராடுவது வரை அனைத்துக் காட்சிகளிலும் லாஜிக் மீறல்கள். விதியை வைத்து படமெடுத்தால் எப்படி வேண்டுமானாலும் காட்சி வைத்துவிடலாம் என்று இயக்குநர் நினைத்து விட்டார் போலும்.
சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை தொய்வடையும் திரைக்கதைக்கு பலமாக இருக்கிறது. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. படத்தின் ஆரம்பத்தில் வரும் விதியின் மனித வடிவ சிஜியில் தொழில்நுட்பக் குழுவினரின் நேர்த்தியான உழைப்பு தெரிகிறது.
வழக்கமான சந்தானம் படங்களில் இருக்கும் பாடி ஷேமிங் வசனங்கள் ஒன்று கூட படத்தில் இதில் இடம்பெறாதது மிகப்பெரிய ஆறுதல். அந்தளவுக்கு மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார். முந்தைய படங்கள் மீதான விமர்சனங்களை கருத்தில் கொண்டே இந்த மாற்றம் நிகழ்ந்திருந்தால் சந்தானத்தை கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும். இந்த மாற்றம் அடுத்தடுத்த படங்களிலும் தொடரும் என்று நம்புவோம்.
மொத்தத்தில் முதல் பாதியின் திரைக்கதையை செதுக்கி, இரண்டாம் பாதியின் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் இது சந்தானத்தின் பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கும்.