பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தைத் தொடர்ந்து 200-வது நாளாகக் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

திருமண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்தாண்டு நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின் 200-வது நாளையொட்டி இன்று, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கையில் கரும்புடன் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் டி,ரவீந்திரன் நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், தமிழ்நாடு விவசாயச் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.துரைராஜ், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுந்தர.விமலநாதன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். முன்னதாக தமிழக அரசைக் கண்டித்துக் கண்டன முழக்கமிட்டனர். இறுதியில் சுவாமிமலை நிர்வாகி ஆ.சரபோஜி நன்றி கூறினார்.

பின்னர் மாநிலப் பொதுச் செயலாளர் டி,ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது,, “ தமிழகத்திலுள்ள பல்வேறு சர்க்கரை ஆலைகள், தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் வசம் சென்று விட்டது. இதனால் சுமார் 1 லட்சம் கரும்பு விவசாய குடும்பங்கள் பாதித்துள்ளார்கள். இதற்கு, தமிழக அரசு உடனடியாக தீர்வு காண்பதுடன், கரும்பு விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்.

மேலும், விவசாயிகளை ஏமாற்றிய சர்க்கரை ஆலை அதிபரை கைது செய்ய வேண்டும். எனவே, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.