வாழ்நாள் சாதனைக்கான ஐரோப்பிய கட்டுரை விருதுக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தங்கள் எழுத்துக்கள் மூலம் சிந்தனை பரிணாமத்துக்கு பங்களிக்கும் எழுத்தாளர்களுக்கு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சார்லஸ் வெய்லன் அறக்கட்டளை, கடந்த 1975-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களான அலெக்சாண்டர் ஜினோவீவ், எட்கர் மோரின், வேட்டன் டொடோரோவ், அமின் மாலூஃப், சிரி ஹஸ்ட்வெத், பீட்டர் வோன் மட் உள்ளிட்டோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததி ராயும் தற்போது இணைகிறார். இவர் எழுதிய கட்டுரைகள் ‘ஆசாதி’ என்ற பெயரில் பிரெஞ்ச் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. அந்த மொழி பெயர்ப்பு நூலுக்காகத்தான் வாழ்நாள் சாதனைக்கான ஐரோப்பிய கட்டுரை விருதுக்கு அருந்ததி ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வழங்கும் விழா ஸ்விட்சர்லாந்தின் லாசேன் நகரில் வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்றும், விருதோடு இந்திய மதிப்பில் 18 லட்சம் ரூபாய்க்கான காசோலை அளிக்கப்படும் என்றும் சார்லஸ் வெய்லன் அறக்கட்டளை அறிவித்துள்ளது.