மும்பை: ஐபிஎல் 2024 சீசன் இந்தியாவில்தான் நடைபெறும் என்று அதன் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தொடங்கும் உத்தேச தேதி குறித்தும் அருண் துமால் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்படி, பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று அவர் உறுதிப்படுத்தினார். எனினும், இந்த ஆண்டு இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் போட்டிகள் தொடங்குவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசிய அருண் துமால், “பொதுத்தேர்தல் தேதிகள் தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட்ட பின்னரே ஐபிஎல் போட்டிகள் அறிவிக்கப்படும்.

 

 

பொதுத்தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் வரை நாங்கள் காத்திருப்போம். அதன்பிறகே திட்டமிடல்கள் தொடங்கும். இதற்காக இந்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். எனினும், பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்க வாய்ப்புள்ளது. தேர்தல் தேதியை பொறுத்து எந்தெந்த மாநிலத்தில் போட்டிகளை நடத்துவது என்பது தீர்மானிக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.