மதுரையில் ரூ.500 கோடிக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இன்றைய கேள்வி நேரத்தில் மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி,” மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு,”தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளது. இதில் 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓசூர் மற்றும் சிவகாயில் விரைவில் இந்த பணிகள் தொடங்க உள்ளது. மதுரையில் ரூ.500 கோடி பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே ஏற்கெனவே உள்ள குழாய்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.