இந்திய வாகனச் சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹய்கிராஸ் வாகனத்தை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய வாகனத்தின் டிசைன் பார்க்க எஸ்யூவி போல உள்ளது. இதற்கான முன்பதிவை ஆன்லைன் மற்றும் டீலர்ஷிப் மூலம் தொடங்கியுள்ளது டொயோட்டா. இந்த கார் 5 வேரியண்ட்டுகளில் சந்தையில் அறிமுகாகி உள்ளது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் கட்டமைப்பை கொண்டுள்ளது.
இந்தியாவில் டொயோட்டா கார்களை கிர்லோஸ்கர் குழுமம், டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் உடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இதன் தலைமையகம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ளது. கடந்த 2004 வாக்கில் எம்பிவி காரான இன்னோவா காரை டொயோட்டா அறிமுகம் செய்தது. இதுவரையில் மொத்தம் 2.6 மில்லியன் இன்னோவா கார்கள் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வாகனத்தை ரூ.50,000 முன்பணமாக செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிகிறது. வரும் ஜனவரி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விலை குறித்த விவரம் ஏதும் இப்போது வெளியாகவில்லை.
இதன் பம்பர் மற்றும் முன்புற கிரில் கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது. இன்னோவா கிரிஸ்டா மாடலுடன் ஒப்பிடும்போது இதன் வீல் பேஸ் சற்று பெரிதாக உள்ளது. 4-வீல் டிரைவ் செட்-அப் அம்சம் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உட்புறத்தை பொறுத்தவரையில் 10.1 இன்ச் இன்போடெய்ன்மெண்ட் டச் ஸ்கிரீன், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ செட்-அப், ட்யூல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், சன் ரூப் போன்றவற்றை கொண்டுள்ளது. 2.0 லிட்டர் ஹைபிரிட் எஞ்சின் மூலம் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 0 டூ 100 கிலோமீட்டர் வேகத்தை 9.5 நொடிகளில் எட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேன் சேஞ் அசிஸ்ட், ஆட்டோ ஹை பீம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற சாலை போக்குவரத்து பாதுகாப்பு சார்ந்த அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.