தமிழகத்தில் மேலும் 7 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் பெறுவதற்கு வனத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திருப்பூர், நீலகிரியில் 2 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

1971-ம் ஆண்டில் ஈரான் நாட்டில் உள்ள ராம்சர் நகரில் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையின்படி, உலகெங்கும் உள்ள சதுப்பு நிலங்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து ராம்சர் தலங்கள் என அடையாளப்படுத்தி, சர்வதேச முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 75 ராம்சர் தளங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் 14 தளங்கள் உள்ளன. இவற்றில் கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் & உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், சுசீந்திரம் தேரூர் சதுப்பு நில வளாகம், வடுவூர் பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைக்கு ராம்சர் அங்கீகராம் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேலும் 7 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் பெற தமிழ்நாடு மாநில ஈர நில ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் குளம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள லாங்வுட் சோலை ஆகிய இரண்டு ராம்சர் அங்கீகாரம் பெறுவதற்கான பணிகளை தமிழக அரசின் வனத்துறை தொடங்கியுள்ளது. மேலும் 5 தலங்கள் விரைவில் அடையாளம் காணப்படவுள்ளன.

இதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள லாங்வுட் சோலை பசுமை மாறாக் காடுகளுக்கு சமீபத்தில் இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை (குயின்ஸ் கனோபி) விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.