வட தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று (ஜூலை 8) திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
9-ம் தேதி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும்புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக் கூடும்.
பருவமழை தீவிரம்
தென் மேற்குப் பருவமழை தீவிரமடைவதன் காரணமாக வரும் 10, 11-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.