ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ சதிதிட்டம் எதுவும் தீட்டவில்லை” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 22) ஆஜராகி தனது வாக்குமூலம் அளித்தார். அதன்பின்னர் அவரிடம் சசிகலா தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அப்போது, சசிகலா தரப்பு வழக்கறிஞர், ”இந்த ஆணையத்தின் முன் ஆஜராகியிருந்த 8 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அளித்துள்ள சாட்சியத்தில், 2011-12 காலகட்டத்திலும் அதன் பின்னரும் சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ சதிதிட்டம் தீட்டியது இல்லை என்று கூறியுள்ளனரே, இதுசரியா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ”சாட்சியங்கள் அதிகாரிகள் ஆணையத்தில் கூறியது சரிதான். ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ சதிதிட்டம் எதுவும் தீட்டவில்லை. 2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான வீரபெருமாள் என்பவரை அழைத்து என்னை அழைத்துவருமாறு கூறியுள்ளார்.

என்னிடம் இதுபோல தீர்ப்பு வந்துள்ளதாக கூறி, உடனடியாக சென்னைக்கு விரைந்து அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகளைச் செய்யவும், அமைச்சர்களைக் கூட்டி அடுத்த முதல்வரை தேர்வு செய்யும்படியும் ஜெயலலிதா கூறினார். அப்போது கண்கலங்கிய நிலையில் இருந்த என்னை, ’பன்னீர் அழுகாதீர்கள், இப்போதுதான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா கூறினார்.

முன்னதாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் இல்லை. பெரும்பாலான மக்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகிக்கின்றனர். சசிகலாவின் மீது எப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் உண்டு” என்று அவர் கூறினார்.

இன்று காலை ஆணையத்தின் சார்பில் கேட்கப்பட் கேள்விகளுக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ”2016 டிசம்பர் 5-ம் தேதி இறப்பதற்கு முன்பாக ஜெயலலிதாவை நான் உட்ப அமைச்சர்கள் 3 பேர் அவரை நேரில் பார்த்தோம். உயிர்காக்கும் கருவியாக இருக்கக்கூடிய எக்மோ கருவியை ஜெயலலிதாவின் உடலில் இருந்து அகற்றுவதற்கு முன் அவரை நேரில் பார்த்தேன்.

அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 4-ம் தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தபோது, ஜெயலலிதாவை சந்திக்காமல், பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் நினைவில்லை. அன்றைய தினம் ஜெயலலிதா இதய துடிப்பு செயலிழந்த நிலையில், மீண்டும் இதயத்துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை அளித்தது குறித்து எனக்கு தெரியாது.

ஆனால், அன்று மாலை எக்மோ கருவி பொருத்தப்பட்டது குறித்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் கூறினார். அவர் இறப்பதற்கு முன்பாக மூத்த அமைச்சர்கள் 3 பேருடன் நான் அவரை நேரில் பார்த்தேன்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here