இந்தியா – சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் போக்கை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இருதரப்பு ராணுவத்தினரும், அதிகாரிகளும் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், இரு நாட்டு எல்லையான கிழக்கு லடாக் பகுதியில், சீன நாட்டின் போர் விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று இந்திய விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறியிருப்பதாவது:

லடாக்கிலுள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) சில நாட்களுக்கு முன்பு சீனபோர் விமானத்தின் நடவடிக்கைதென்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்புப் பணியைதீவிரப்படுத்தினோம். எல்ஏசி பகுதியில் சீன விமானம் தென்பட்டவுடன் இந்திய விமானப்படை விமா னங்களை அப்பகுதிக்கு அனுப் பினோம். நிலைமையைச் சமா ளிக்கவும், சீன விமானங்களை எதிர்கொள்ளவும் இந்திய விமானப் படை விமானங்கள் அனுப்பப்பட்டன. எல்ஏசி பகுதியில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதியில் உள்ள ராணுவத்தைச் சீண்டும் வகையில் இதுபோன்று பலமுறை எல்ஏசி பகுதியில் சீன போர் விமானங்கள் தென்பட்டுள்ளன.

இரு நாடுகளின் சூழலைக் கருத்தில் கொண்டு எந்தவித நிலைமையையும் சமாளிக்க இந்திய விமானப் படை தயாராகவுள்ளது.

சீன விமானங்களின் நடவடிக்கையை மிகவும் உன்னிப்பாகவும், நெருக்கமாகவும் கண்காணித்து வருகிறோம். எல்ஏசி பகுதியில் சீனபோர் விமானங்கள் தென்பட்டாலோ அல்லது ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள் தென்பட்டாலோ, அந்த விமானங்களுடன் போரிடுவதற்கு நமது விமானங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

மேலும் நமது விமானங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. லடாக் பகுதியில் சீன விமானம் பறந்தபோது இந்திய விமானப் படை விமானங்கள் அங்கு அனுப்பப்பட்டு சீன விமானம் விரட்டப்பட்டது. இந்திய விமானப் படையின் விமானங்கள் கண்காணிப்பில் இருப்பதால், எல்ஏசி பகுதியில் சீன ராணுவத்தினர் தங்களது நடவடிக்கையை நிறுத்திவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

16-வது பேச்சுவார்த்தை…

கிழக்கு லடாக்கில் ராணுவப் படைகளைக் குறைப்பது தொடர்பாக இதுவரை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பினரும் ஓரளவு படைகளை திரும்பப்பெற்றனர்.

இருப்பினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது.

இந்நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் நிலையிலான 16-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இதில் இந்தியா தரப்பில் ராணுவ 14-வதுபடைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா பங்கேற்றார்.