பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செப். 07) செய்தித்துறை (செய்தி மற்றும் விளம்பரம்) மானியக் கோரிக்கையின்போது, அத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பத்திரிகையாளர்கள் நலனுக்காக 5 அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

அதன் விவரம்:

” *பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

* பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவி நிதி மூன்று லட்சம் ரூபாயிலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

* தொழிற்தகுதி, திறன் மேம்பாடு, மொழித்திறன், நவீனத் தொழில்நுப்டம் குறித்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.

* இளம் பத்திரிகையாளர்கள் இந்திய அளவில் புகழ்மிக்க இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் போன்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்படும்.

* சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’, ரூபாய் 5 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.