சென்னை: இருசக்கர வாகனங்களில் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போக்குவரத்து போலீஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த விதியை மீறுபவர்களிடம் இன்றுமுதல் அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் விபத்துகளை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த விதிகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை இன்று (மே 23) முதல் நடத்தப்படுகிறது. மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தலின் பேரில் இதற்கான உத்தரவை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவில், ‘`ஏற்கெனவே, இந்த திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக போலீஸார் இதை கடுமையாக பின்பற்றவில்லை. தற்போது விபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.