உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ்    மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தின் கீழ் மாணவிகள் பயன்பெற புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக விண்ணபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் ஏற்கனவே பிற கல்வித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜூன் 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. எனினும்  https://penkalvi.tn.gov.in இணையதளத்தில் மாணவிகள் பலர் விண்ணப்பிக்க தொடங்கியதால் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து. ஜூலை 10ம் தேதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மேலும் அவகாசம் நீட்டிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு எதையும் அரசு வெளியிடவில்லை. எனவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.