இந்திய நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சுமார் 5 லட்சம் யூரோக்களை முதலீடு செய்ய ஜெர்மனி நாடு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கரோனா தொற்று பரவலுக்கு பிறகு உலக சுற்றுலாத் துறை மெதுவாகப் புத்துயிர் பெற்று வருகிறது. இத்தகைய சூழலில்தான் இந்த பலே திட்டத்தை வகுத்துள்ளது ஜெர்மனி.

தமிழில் கடந்த 1980-களில் வெளியான திரைப்படமான ‘உல்லாச பறவைகள்’ படத்தின் காட்சிகளில் பெரும்பாலானவை ஜெர்மனியில் படம்பிடிக்கப்பட்டவை. அது தவிர அந்தப் படம் மேலும் இரண்டு அயல் நாடுகளில் படம் பிடிக்கப்பட்டது. குறிப்பாக பஞ்சு அருணாசலம் எழுதிய “ஜெர்மனியின் செந்தேன் மலரே” என தொடங்கும் பாடல் முழுவதும் ஜெர்மனி நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் படம் பிடிக்கப்பட்டவை.

இந்தப் பாடல் மற்றும் படம் குறித்து இப்போது பேச ஒரு காரணம் உள்ளது. கடந்த 2019-ல் மட்டும் இந்தியாவில் இருந்து சுமார் 9.6 லட்சம் பயணிகள் ஜெர்மனுக்கு சுற்றுலா நிமித்தமாக சென்றுள்ளதாக அந்த நாட்டின் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் ஜனவரி – மே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1.6 லட்சம் என இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2023 வாக்கில் மீண்டும் பழையபடி ஆண்டுக்கு சுமார் 9.6 லட்சம் இந்தியப் பயணிகள் என்ற எண்ணிக்கையை அந்த நாடு எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இப்போதைக்கு ஜெர்மனி நாட்டுக்கு சுற்றுலா நிமித்தமாக வர இந்திய நாட்டில் டிமாண்ட் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு தங்கள் நாட்டின் சுற்றுலா மேம்பாட்டுக்காக சுமார் 5 லட்சம் யூரோக்களை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனி சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

 

 

 

ஐரோப்பிய கண்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களில் 9 சதவீதம் பேர் ஜெர்மனி செல்ல விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 55 சதவீதம் பேர் ஓய்வுக்காகவும், 38 சதவீதம் பேர் வணிக ரீதியாகவும் ஜெர்மனி செல்வதாகவும் சொல்லப்பட்டுளள்து.

இந்நிலையில், தங்கள் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த சுற்றுலாவை பிரபலப்படுத்த ஜெர்மனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.