தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஒன்றில் இருந்து 34 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் கூறியதாவது:
”அண்மையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழகம் வந்த 114 பேரில் 57 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருந்ததால் அவர்களின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஏற்கெனவே நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இந்நிலையில், இப்போது மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஒன்றில் இருந்து 34 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர் கேரளாவில் இருந்து வந்தவர்.
சென்னையில் 26 பேருக்கு, மதுரையில் 4 பேருக்கு, திருவண்ணாமலையில் 2 பேருக்கு, சேலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதித்துள்ளது. இன்னும் 24 பேருக்கு சோதனை முடிவு வரவேண்டியுள்ளது. விமான நிலையங்களில் கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெறும்”.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா (65), டெல்லிக்கு (64) அடுத்தபடியாக தமிழகம் (34 பேர்) மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.