சென்னை: ” சிதம்பரம் திருக்கோயிலில் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கைகள், அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் குறித்து ஆயிரக்கணக்கான புகார்கள் வந்துள்ளன” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள அகத்தீஸ்வரர் மற்றும் வேள்விஸ்வரர் திருக்கோயில் திருக்குளங்களில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ஏற்கெனவே சிதம்பரம் திருக்கோயிலில் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளும், அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் குறித்தும் ஆயிரக்கணக்கான புகார்கள் வந்துள்ளன.

லட்சக்கணக்கானோர் கையெழுத்திட்டு மனுக்களாகவும் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குழு, ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அந்த ஆய்வு முடிவின் அறிக்கை வந்தவுடன், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்ல இருக்கின்றோம்.

ஒவ்வொரு அடியையும் அளந்து, நிதானமாக, அழுத்தமாக வைத்துக் கொண்டிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை” என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, ஆணையர் குமரகுருபரன் மற்றும் எம்எல்ஏ கணபதி ஆகியோர் உடனிருந்தனர்.