சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சாலையில் சுற்றித் திரிந்த 557 மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. மேலும், இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,550 அபராதம் விதிக்கப்படுகிறது.

இதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 557 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550/- வீதம் ரூ.8,63,350 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவொற்றியூரில் 20, மணலியில் 24, மாதவரத்தில் 19, தண்டையார்பேட்டையில் 38, ராயபுரத்தில் 29, திரு.வி.க.நகரில் 46, அம்பத்தூரில் 56, அண்ணாநகரில் 44, தேனாம்பேட்டையில் 71, கோடம்பாக்கத்தில் 58, வளசரவாக்கத்தில் 25, ஆலந்தூரில் 29, அடையாறில் 34, பெருங்குடியில் 22, சோழிங்கநல்லூரில் 42 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிடிக்கப்பட்ட மாடுகளை தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்தால் மட்டுமே மாடுகளை விடுவித்து கொள்ள முடியும்.

மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்யும்போது, அந்த இடங்கள் குறித்து முன்கூட்டியே அந்தந்த மண்டல நல அலவலர்களின் அனுமதி பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.