மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய பாஜக வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கோவையில் தனது இறுதிகட்ட பிரச்சாரத்தின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மாநகராட்சி பகுதிகளில் நேற்று தனது இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். காலை முதல் மாலை வரை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், 53-வது வார்டு மசக்காளிபாளையம் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு முன்னால் 18 ஆயிரம் கிராமங்களில் மின்சாரம் இல்லாத நிலையை, பிரதமராகி 750 நாட்களில் மாற்றி, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டில் உள்ள மாநிலங்களில் சாதிகளை மையப்படுத்தி இருந்த அரசியல் மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அரசியல் மாற்றம் வர வேண்டும்.மத்திய அரசு கொண்டு வந்துள்ளதிட்டத்தால் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். முத்ரா திட்டத்தின் மூலம் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து பகுதியிலும் சென்றடைந்துள்ளன. மேலும், மத்திய அரசின் பல திட்டங்கள் அனைத்து மக்களையும் முழுமையாக சென்றடைய பாஜக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் திமுக ஆட்சி செய்துவரும் நிலையில், தங்களது ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் ஒரு கொலுசு மூலமாக வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர். பணம் கொடுத்து திமுக தேர்தலை மாற்றி விட முயற்சிக்கிறது. தேர்தலில் பண கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்.

தற்போதைய தேர்தலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாகபாஜக சார்பில் புகார் அளிக்கப்படும். ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகார்கள் மீது காவல் துறையால்வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அடுத்து மாநில தேர்தல்ஆணையத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது.

கோவையில் தேர்தல்கண்காணிப்பு அதிகாரிகள் 4 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. தற்போதைய அதிகாரிகள் தேர்தலை முறையாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.