அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 6 பேர் கொண்ட சட்ட ஆலோ சனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:

அரசியல் காழ்ப்புணர்ச்சி

அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பலர் மீதுஆளும் கட்சியினரின் தூண்டுதலால் பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்குகள் புனையப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கட்சிப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அயராது ஈடுபட்டு வரும் அனைவருக்கும் அதிமுக எப்போதும் அரணாகத் திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

அதன்படி, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ளும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், என்.தளவாய் சுந்தரம் சி.வி.சண்முகம், அமைப்புச் செயலாளர் பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் ஐ.எஸ்.இன்பதுரை, ஆர்.எம்.பாபுமுருகவேல் ஆகியோரைக் கொண்ட சட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவை தொடர்பு கொள்ள வேண்டும்

இந்த குழுவானது பொய் வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாகச் செய்யும். எனவே, அதிமுகவினர் குழுவைத் தொடர்பு கொண்டு உரிய தீர்வுகாணவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.