இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெறும் பகுதிகளில் வீட்டுமனைப் பிரிவு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் தாம்பரம், பூந்தமல்லி, சிறுசேரி பகுதிகளில் வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில் கட்டுநர்களும் மும்முரமாக உள்ளனர்.

people-keen-to-buy-plots-near-metro-stations

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை, உள் வட்டச் சாலை, வெளிவட்டச் சாலை என பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. இவற்றில் முக்கியமாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு போய்ச் சேர மெட்ரோ ரயில் வரப்பிரசாதமாக உள்ளது.

முக்கிய பகுதிகள் இணைப்பு

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்து அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளைஇணைக்கிறது. இதனால் மக்கள்பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மாதவரம் – சிறுசேரி, விவேகானந்தர் இல்லம் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையே நடைபெற்று வருகின்றன.

இவைதவிர, மீனம்பாக்கம் – கிளாம்பாக்கம் இடையே மெட்ரோரயில் விரிவாக்க திட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் அடுத்த சில ஆண்டுகளில் முடிவடைந்து, இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றநம்பிக்கையில், இப்பகுதிகளில் வீட்டுமனைப் பிரிவுகள் வாங்குவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதனால், இப்பகுதிகளில் வீட்டுமனைப் பிரிவுகள் அமைப்பதில் கட்டுநர்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள்

இதுகுறித்து இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் பொதுப்பணித் துறை குழுத் தலைவர் எல்.வெங்கடேசன் கூறியதாவது:

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களையொட்டி உள்ள தாம்பரம், பூந்தமல்லி, சிறுசேரி, கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளில் ஏராளமான வீட்டுமனைப் பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. சிறுசேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளும் விற்கப்படுகின்றன.

மின்சார ரயில், பறக்கும் ரயில் போன்ற ரயில்களில் பயணித்தால் குறிப்பிட்ட இடத்துக்கு குறித்த நேரத்தில் போய்ச் சேர முடியும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால், சிறந்த பொதுப் போக்குவரத்தாக கருதப்படும் மெட்ரோ ரயிலில் குறித்த நேரத்தில் போய்ச் சேர முடியும். அதனால் மற்ற இடங்களைவிட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அங்கு விலையும் சற்று அதிகமாகவே இருக்கிறது.

படப்பை, பெருங்களத்தூர், திருமழிசை, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையொட்டிய பகுதிகள் என பல்வேறு இடங்களில் வீட்டுமனைப் பிரிவுகள் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதே வீட்டுமனைப் பிரிவுகள் எண்ணிக்கை அதிகமாவதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.