“நம்முடைய ஜனநாயகம், நாடாளுமன்ற முறையை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால், நாடாளுமன்றம் தான் நமது ஜனநாயகத்தின் ஆலயம்” என்று நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த மழைக்காலக் கூட்டத்தொடர் அமளியால் முடங்கிய நிலையில் குடியரசுத் தலைவரின் உரை முக்கியத்துவம் பெறுகிறது.

75வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு மேதகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும், சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள். இந்த நாள் நம் அனைவருக்கும் மிகவும் சந்தோஷமான, உற்சாகமான நன்னாள். இந்த ஆண்டு நம்முடைய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு என்ற முறையில், சுதந்திரத்தின் அமிர்த மகோத்ஸவத்தை நாம் கொண்டாடுகிறோம்.

நமது குடியரசின் கடந்த 75 ஆண்டுகளின் பயணத்தின் மீது நாம் ஒரு பார்வை செலுத்தினோம் என்றால், நாம் வளர்ச்சிப் பாதையில் கணிசமான தொலைவு பயணித்திருக்கிறோம் என்பதில் நம்மால் பெருமிதம் கொள்ள முடியும். தவறான பாதையில் விரைந்து செல்வதைக் காட்டிலும், நிதானமாக, ஆனால் அதே வேளையில் சீராக நல்ல பாதையில் பயணிப்பது என்பது சாலச் சிறந்தது என்ற கற்பித்தலை, அண்ணல் நமக்கு அளித்திருக்கிறார்.

தற்போது நிறைவடைந்திருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் தங்கள் அருமையான செயல்பாட்டினைப் புரிந்து தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கின்றார்கள். பாரதம், ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களில் இதுவரை பங்கேற்ற 121 ஆண்டுகளில், இந்த முறை தான் மிக அதிக அளவில் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்திருக்கின்றது.

நமது பெண்கள் பல தடைகளைத் தாண்டி, விளையாட்டு மைதானத்தில் உலக அளவிலே அதிகச் சிறப்பைப் பெற்றிருக்கின்றார்கள். விளையாட்டுக்களோடு கூடவே, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பிலும் வெற்றியிலும், ஒரு யுகாந்திர மாற்றம் நடந்து வருகிறது. உயர்கல்வி நிறுவனங்கள் முதல் ஆயுதம் தாங்கிய படைகள் வரை, பரிசோதனைக்கூடங்கள் முதல் விளையாட்டுமைதானங்கள் வரை, நமது பெண்கள் தங்களுக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து வருகிறார்கள். பெண்களின் இந்த வெற்றி, வருங்கால வளர்ச்சி அடைந்த இந்தியாவின் ஒரு காட்சியை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

இப்படிப்பட்ட புத்திசாலித்தனம் நிறைந்த பெண்களின் குடும்பங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், உங்கள் பெண்களும் முன்னேறத் தேவையான வாய்ப்பை அளியுங்கள் என்பதே, நான் தாய்-தந்தையர் ஒவ்வொருவரிடத்திலும் விடுக்கும் வேண்டுகோள்.

கடந்த ஆண்டினைப் போலவே, பெருந்தொற்றுக் காரணமாக, இந்த ஆண்டும் சுதந்திரத் திருநாளை விமரிசையாகக் கொண்டாட முடியாது. கடந்த ஆண்டு, அனைவரின் அசாதாரணமான முயற்சிகளின் பலத்தின் துணைக் கொண்டு, நம்மால் பெருதொற்றின் பரவலைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் வெற்றி பெற முடிந்தது.

நமது விஞ்ஞானிகள் மிகக் குறைந்த காலத்தில், தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் கடினமான செயல்பாட்டில் வெற்றி பெற்றார்கள். ஆகையால், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நாம் அனைவரும் நம்பிக்கை நிறைந்தவர்களாய் இருந்தோம், வரலாற்றிலேயே மிகப் பெரிய தடுப்பூசி போடும் இயக்கத்தை நாம் தொடக்கினோம். இருந்தாலும் கூட, கொரோனா நுண்கிருமியின் புதிய வடிவங்களும், பிற எதிர்பாராத காரணங்களின் விளைவாக, நாம் இரண்டாவது அலையின் பயங்கரமான பாதிப்பை அனுபவிக்க வேண்டியிருந்தது.

இரண்டாவது அலையின் போது, பலரின் உயிர்களை நம்மால் காப்பாற்ற இயலவில்லை என்பது, எனக்கு ஆழமான வருத்தத்தை ஏற்படுத்துகிறது, பலர் இதனால் பலமான இடர்களை எதிர்கொள்ளவும் வேண்டி வந்தது. இதுவரை காணாத ஒரு சங்கடம் நிறைந்த சூழ்நிலை இது. நாடு முழுமையின் தரப்பிலிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

இதுவரையிலான அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம், நாம் தொடர்ந்து எச்சரிக்கையோடு இருப்பது அவசியம் என்பது தான். இந்த வேளையில் தடுப்பூசி என்பது, அறிவியல் வயிலாக சுலபமாக்கப்பட்டிருக்கும் மிகச் சிறப்பான ஒரு கவசமாக விளங்குகிறது.

நமது நாட்டில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தின்படி இதுவரை, 50 கோடிக்கும் மேற்பட்ட நாட்டுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாகி விட்டது. வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி, விரைவாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், மற்றவர்களும் போட்டுக் கொள்ள உத்வேகம் அளியுங்கள் என்று, நாட்டுமக்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இப்போது ஜம்மு-கஷ்மீரத்தில் ஒரு புதிய விழிப்பினைக் காண முடிகிறது. ஜனநாயக மற்றும் சட்டரீதியான ஆளுகை மீது நம்பிக்கை கொண்ட அனைத்துத் தரப்பினரோடும் ஆலோசனைகளைப் புரியும் செயல்பாட்டை அரசு தொடங்கியிருக்கிறது. ஜம்மு-கஷ்மீரத்தில் வசிப்பவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தின் ஆதாயத்தை அனுபவிக்கவும், ஜனநாயக அமைப்புகளின் வாயிலாக உங்கள் எதிர்பார்ப்புக்களை மெய்ப்பிக்கவும், ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என, குறிப்பாக இளைஞர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

முழுமையான முன்னேற்றம் என்பதன் காரணமாக, சர்வதேச அளவில் பாரதத்தின் நிலை உயர்ந்து வருகிறது. இந்த மாற்றம், முக்கியமாக பலதரப்பு அரங்குகளில், நமது வலுவான பங்களிப்பில் பிரதிபலித்ததோடு, பல நாடுகளுடனான நமது இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் உறுதுணையாக இருக்கிறது.

நம்முடைய ஜனநாயகம், நாடாளுமன்ற முறையை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால், நாடாளுமன்றம் தான் நமது ஜனநாயகத்தின் ஆலயம். அங்கே தான் மக்கள் சேவையின் பொருட்டு, மகத்துவம் வாய்ந்த விஷயங்கள் மீதான வாத-விவாதங்கள், உரையாடல்கள், தீர்மானங்கள் ஆகியன செய்யக்கூடிய மிகவுயர்ந்த தளம் கிடைத்திருக்கிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் மிகவும் பெருமிதம் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், நமது ஜனநாயகத்தின் இந்த ஆலயம், அண்மை வருங்காலத்தில் ஒரு புதிய கட்டிடத்தில் நிறுவப்பட இருக்கிறது.

இந்தக் கட்டிடம், நமது கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை வெளிப்படுத்தும். இதிலே நமது மரபுகள்பால் மரியாதை உணர்வு ஏற்படும் என்பதோடு, சமகால உலகத்திற்கு இசைவான வகையிலே பயணிக்கும் திறமையும் வெளிப்படும். சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு என்ற சந்தர்ப்பத்தில், இந்தப் புதிய கட்டிடத்தின் தொடக்கம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு வரலாற்று மையப்புள்ளியாகப் போற்றப்படும்.

நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் நாட்டுப்பற்று மற்றும் தியாக உணர்வு மேலோங்கி இருந்தது. அவர்கள் தங்கள் நலன்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொண்டார்கள். கொரோனா சங்கடத்தை எதிர்கொள்வதிலும், லட்சக்கணக்கானோர் தங்களைப் பற்றிக் கவலையேதும் படாமல், மனிதநேயத்தோடு, எந்த ஒரு சுயநலமும் பாராட்டாமல் மற்றவர்களின் உடல்நலன் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க, பெரும் அபாயங்களைச் சந்தித்ததை நான் பார்த்தேன்.

இப்படிப்பட்ட அனைத்து கோவிட் வீரர்களுக்கும், நான் என் இதயம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல கோவிட் வீரர்கள், தங்களுடைய உயிரையும் இதனால் இழக்க வேண்டியிருந்தது. இவர்கள் அனைவரின் நினைவுகளுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

குறிப்பாக, நான் நாட்டின் ஆயுதப் படையினரின் வீரர்களை மெச்ச விரும்புகிறேன். அவர்கள் தாம் நமது சுதந்திரத்தைக் காத்தவர்கள், தேவை ஏற்படும் வேளைகளில் எல்லால் உவப்போடு உயிர்த்த்யியாகமும் செய்திருக்கின்றார்கள். அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரையும் கூட நான் பாராட்ட விரும்புகிறேன். அவர்கள் எந்த தேசத்தைத் தங்கள் இல்லமாகக் கருதி வசித்து வருகிறார்களோ, அங்கே தங்கள் தாய்நாடு பற்றிய பிம்பத்தை பிரகாசமானதாக ஆக்கியிருக்கிறார்கள்.

நான் மீண்டுமொரு முறை அனைவருக்கும், பாரதத்தின் 75ஆவது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வேளையிலே, எனது மனம் இயல்பாகவே, சுதந்திரத்தின் நூற்றாண்டாக வரும் 2047ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த, தன்னிறைவு பெற்ற, அமைதி தவழும் பாரதம் குறித்த ரம்மியமான எண்ணங்களால் நிரம்புகிறது.

நம் நாட்டுமக்கள் அனைவரும் கோவிட் பெருந்தொற்றின் சீற்றத்திலிருந்து விடுதலை பெற வேண்டும், சுகமான, நிறைவான பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற மங்கலம் நிறைந்த விருப்பங்களை முன்வைக்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரும் என் நல்வாழ்த்துக்கள். நன்றி. ஜெய் ஹிந்த்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.