சென்னை: மதுபாட்டிலால் தாக்கி நகை, பணம் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரத்தில், வழிப்பறிக்கு உள்ளான முன்னாள் வங்கி ஊழியர் மரணம் அடைந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியாசர்பாடி, கக்கன்ஜி நகர், காந்திஜி 6-வது தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் (26). முன்னாள் வங்கிஊழியரான இவர் கடந்த 2-ம் தேதி தங்க சாலை பேருந்து நிறுத்தம் பின்புறம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 3 பேர் யுவராஜை மதுபாட்டில், கல்லால் தாக்கி அவரிடமிருந்த பணம், செல்போன் மற்றும்மோதிரத்தை பறித்துக் கொண்டுதப்பினர்.

தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீஸார் சம்பவ இடம்விரைந்து யுவராஜை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி யுவராஜ் நேற்று முன்தினம் இறந்தார்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் கொலை வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (24), பழையவண்ணாரப்பேட்டை சூர்யா என்றதடி சூர்யா (20), அதே பகுதியைச்சேர்ந்த பிரேம் (46) ஆகிய 3 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.