தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆட்சிக்கு வந்த திமுகவின் முதல் நிநிதிநிலை அறிக்கை, மக்களை விரக்தியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிநிலை அறிக்கையையும், திமுக தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால், திமுக மக்களை வஞ்சித்திருப்பது தெரியும் என்றும் தமிழ்நாட்டின் நிதி நிலைமையை முன்கூட்டியே அறிந்திருந்தும், ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்தாக தெரிவித்துள்ளார்.

வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, கடன் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு, நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையையும், திருத்திய நிதிநிலை அறிக்கையையும் ஒப்பிட்டுப்பார்த்தால், மாற்றத்திற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கனிமங்கள் மற்றும் சுரங்கங்களில் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை தவிர, புதிதாக வருவாய் வருவதற்கான வழிமுறைகள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் சுட்டிக் காட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடும் போது, இந்த திருத்திய நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, கடன், செலவு ஆகியவை அதிகரிக்கப்பட்டு வருவாய் குறைந்துள்ளது.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் சாதனைகளே இல்லாத சோதனைகள் நிறைந்த வேதனையான நிதிநிலை அறிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.