சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்டு வரும் 75-வது சுதந்திர தின நினைவுத் தூணை, வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதையடுத்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் அருகே தேர்வு செய்யப்பட்டது. அதையடுத்து டெண்டர் விடப்பட்டு, ரூ.1.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 3-ம் தேதி பணிகள் தொடங்கியது.

முதல்வர் உத்தரவின்பேரில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன.

“நினைவுத் தூணின் அடித்தளம் 10 அடி நீளத்திலும், 10 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. 55 அடி உயரம் கொண்ட நினைவுத் தூணை அமைக்கும் பணியில் 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மொத்த பணிகளும் முடிக்கப்பட்டு இன்று (ஆக.13) அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. 10 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். வரும் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது சுதந்திர தின நினைவுத் தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்று பொதுப்பணித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.