காங்கிரஸில் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி குடும்பத்தவர்கள்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இந்தி நாளிதழ் ஒன்றுக்கு சல்மான் குர்ஷித் பேட்டி அளித்திருந்தார். மல்லிகார்ஜுன கார்கே கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு அமைப்பு ரீதியாக ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சல்மான் குர்ஷித், ”எங்களுக்குத் தலைமை காந்தி குடும்பம்தான். அது அப்படியேதான் இருக்கும். கட்சிப் பணிகளைப் பார்ப்பது மட்டும்தான் மல்லிகார்ஜுன கார்கேவின் வேலை. கார்கேவுக்குப் பதிலாக ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராவார்” என தெரிவித்திருந்தார்.

சல்மான் குர்ஷித்தின் கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்தது. ”வேலை செய்வதற்காக மட்டும்தான் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்; ஆனால், காங்கிரஸின் உண்மையான தலைமை காந்தி குடும்பம்தான் என்பதை சல்மான் குர்ஷித் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸின் உண்மையான முகம் மல்லிகார்ஜுன கார்கே அல்ல; அவர் அக்கட்சியின் முகமூடி. காங்கிரஸ் அதன் தலைவர்களை ஏமாற்றுவதையே இது காட்டுகிறது” என பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார்.

”காங்கிரஸ் கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. குடும்ப அரசியலை, வாரிசு அரசியலைத்தான் காங்கிரஸ் நம்புகிறது. கட்சியின் தலைவர் பொறுப்பில் யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. உத்தரவிடும் இடத்தில் இருப்பவர்கள் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும்தான். அப்படியானால், மல்லிகார்ஜுன கார்கேவை நாங்கள் ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் என அழைக்கலாமா?” என பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில், தனது கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ள சல்மான் குர்ஷித், ”காங்கிரஸில் பல்வேறு தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், முக்கியத் தலைவர்கள் (சோனியா) காந்தி குடும்பத்தவர்கள்தான். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரசின் தேசிய தலைவர். கட்சியை பலப்படுத்த வேண்டிய முக்கியப் பொறுப்பு அவருக்கு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.