பெங்களூரு: கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 8600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்‍பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, ஹாசன் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இரவு பக‌லாக கொட்டித்தீர்க்கும் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதேபோல காவிரியின் முக்கிய துணை ஆறான கபிலா உற்பத்தி ஆகும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2279 ஆக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 749 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 3 ஆயிரத்து 333 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 95.15 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 29 ஆயிரத்து 552 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 297 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய‌ அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 6622 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.