சென்னை: பிரதமர் மோடி 26-ம் தேதி சென்னை வருகை தரும் நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக வரும் 26-ம் தேதி சென்னைக்கு வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக வரும் 26-ம் தேதி மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு வந்து, கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வருகிறார். விழா முடிந்ததும் மீண்டும் காரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு சென்று, ஹெலிகாப்டர் மூலம் சென்னை பழைய விமான நிலையம் வந்து, இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இந்நிலையில், எஸ்பிஜி அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்து, பழைய விமான நிலையம், நேரு உள் விளையாட்டு அரங்கம் ஆகிவற்றை ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று நேரில் ஆய்வு செய்தார்.