நாட்டின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 28 ஆம் தேதி பல மாநிலங்களில் 45 டிகிரியை (113 டிகிரி பாரன்ஹீட்) கடந்ததால் கடும் அனல் காற்று வீசியது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதைக் காட்டிலும் அனல் காற்று வீசும் நேரம் அதிகரித்து வருவது கவலை கொள்ள வைப்பதாக காலநிலை மாற்ற நிபுணர்கள் கூறுகின்றனர்.

கவனிக்க வேண்டிய 3 காரணிகள்:

கொதிகலன் போல் வெப்பம்: டெல்லியில் கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாதாந்திர அதிகபட்ச வெப்பம் 40.2 டிகிரி செல்சியஸ் என்றளவில் உள்ளது. அதுவும் குறிப்பாக கடந்த 6 வாரங்களில் டெல்லியின் சராசரி வெப்பம் 4 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை 46.5 டிகிரி வெப்பம் பதிவானது. ஜோத்பூர், பிகானர் மாவட்டங்களில் மே 1 ஆம் தேதியன்று வெப்பநிலை 45 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நாட்டின் பல மாநிலங்களிலும் வெயில் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த தேசமும் ஒரு கொதிகலன் போல் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் லேசான கோடை மழை பெய்து தூசியையும், வெப்பத்தையும் சற்றே தணியச் செய்யும். ஆனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஏப்ரல் கோடை மழையைப் பெறவில்லை என்றும் அதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

நீண்ட நேரம் வீசும் அனல் காற்று: அதிகபட்ச வெப்பநிலையைக் காட்டிலும் அனல் காற்று வீசும் நேரம் அதிகரித்துள்ளது கவலை கொள்ளச் செய்துள்ளதாக கூறுகிறார் பெர்க்லி எர்த் மையம் காலநிலை மாற்ற விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் ரோட். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா, பாஸ்கிதானை ஆட்கொண்டுள்ள அனல் காற்று அதிகரிக்கும் வெப்பத்தைக் காட்டிலும், வெப்பக் காற்றும் வீசும் நேரம் கவலை கொள்ள வைக்கிறது. கடந்த 6 வாரங்கள் மிகவும் கடினமானதாக இருந்துள்ளது. பல வரலாறு காணாத உச்சங்கள் நிகழ்ந்துள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

உடல்நலப் பிரச்சினைகள்: நாடு முழுவதும் வெப்ப அலையால் ஏற்படும் உடல் உபாதைகள், கரோனா பாதிப்புகளால் ஏற்படும் உபாதைகளைக் காட்டிலும் கவலை கொள்ள வைத்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நிறைய பேர் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் வெப்பம் சார்ந்த நோய்களுடன் மருத்துவமனையில் அனுமதியாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால், கோடை காலத்தில் லகுவான, வெளிர் நிற, தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதோடு தலையில் துணி, தொப்பி அல்லது தலையை மறைக்கும் குடையுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அனல் காற்றுக்கு 6,500 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் தெற்கு ஆசியப் பிராந்திய நாடுகளில் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

கொளுத்தும் வெயில்: எங்கெங்கு எவ்வளவு பதிவு? டெல்லி குருகிராமில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 28 ஆம் தேதி) வெப்பநிலை இதுவரை இல்லாத அளவாக 45.6 டிகிரி செல்சியஸை தொட்டது. இதற்கு முன் கடந்த 1979, ஏப்ரல் 28-ல் 43.7 டிகிரி செல்சியஸ் என்பதே இங்கு அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது.

தலைநகர் டெல்லியில் ஏப்ரல் மாதத்தில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவாக நேற்று முன் தினம் 43.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இதுபோல் உ.பி.யில் அலகாபாத் (45.9 டிகிரி), ம.பி.யில் கஜுராஹோ, நவ்காங் (45.6) மகாராஷ்டிராவில் ஜல்காவோன் (45.6), ஜார்க்கண்டில் டால்டோங்கஞ்ச் (45.8) உள்ளிட்ட நகரங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்தது.

ஆரஞ்சு அலர்ட்: இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கும், கிழக்கு இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கும் கடும் அனல் காற்று நீடிக்கும். வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 2 டிகிரி செல்சியல் உயர வாய்ப்புள்ளது” என்று எச்சரித்துள்ளது.
மேலும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளுக்கு அடுத்த 4 நாட்களுக்கு ஐஎம்டி, ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் வடமேற்கு இந்தியாவில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.