வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2021- 2022 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கமாக ஐ.டி.ஆர் ஐடிஆர் தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்படும். இந்த ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முக்கிய சில ஆவணங்கள் தேவைப்படுகிறது.
இதுகுறித்து மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் கூறியதாவது:
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற எந்த பரிசீலனையும் தற்போது இல்லை. ஏனெனில் பெரும்பாலான வருமான வரி தாக்கல் விவரங்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021-22 நிதியாண்டில் ஜூலை 20 ஆம் தேதிக்குள் 2.3 கோடி வருமானக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.கடந்த நிதியாண்டில் (2020-21), டிசம்பர் 31, 2021 நீட்டிக்கப்பட்ட நிலுவைத் தேதிக்குள் சுமார் 5.89 கோடி ஐடிஆர்கள் (வருமான வரி அறிக்கைகள்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேதி நீட்டிக்கப்படும் என்பது வாடிக்கையான ஒன்று தான் என்று மக்கள் நினைத்தார்கள். அதனால், ஆரம்பத்தில் ரிட்டர்ன்களை நிரப்புவதில் கொஞ்சம் தாமதம் செய்தார்கள். ஆனால் இப்போது தினசரி அடிப்படையில் 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருமான வரி கணக்கு தாக்கல் நடக்கிறது. இது வரும் நாட்களில் 25 லட்சமாக உயரும். 30 லட்சம் ரிட்டர்ன்கள் வரை தாக்கலாகும் என நம்புகிறோம். பொதுவாக, ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்ய கடைசி நாள் வரை காத்திருக்கிறார்கள்.
கடந்த முறை 9-10 சதவீதம் பேர் கடைசி நாளில் தாக்கல் செய்தனர். கடந்த முறை 50 லட்சத்துக்கும் மேல் கடைசி தேதியில் ரிட்டர்ன் தாக்கல் இருந்தது. இந்த முறை கடைசி நாளில் 1 கோடிக்கும் அதிகமானோர் கூட தாக்கல் செய்யக்கூடும் என்பதால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.